மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஒருபுறம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களில் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்படுவது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது பசிபிக் பிராந்தியத்தில் ரோந்து பணியில் இருந்த, அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யூ.எஸ்.எஸ் ஹிக்கின்ஸ்’ (USS Higgins) என்ற வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்பான் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தின் காரணமாக, அந்தப் போர்க்கப்பலின் மின்சாரக் கட்டமைப்பும், நகர்வதற்குத் தேவையான உந்துவிசை (Propulsion) அமைப்பும் முற்றிலும் முடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவும் குளறுபடிகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
இது ஏதோ தற்செயலான விபத்து என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவின் மிக முக்கியமான விமானந்தாங்கி கப்பலான ‘யூ.எஸ்.எஸ் டுவைட் டி. ஐசனோவர்’ (USS Dwight D. Eisenhower) கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எட்டு மாலுமிகள் காயமடைந்தனர். அதற்கு முன்னதாக, ‘யூ.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) என்ற மற்றொரு பிரம்மாண்டமான விமானந்தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாலுமிகள் பாதிக்கப்பட்டனர். இப்போது மூன்றாவது முறையாக ‘யூ.எஸ்.எஸ் ஹிக்கின்ஸ்’ கப்பலில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது, அமெரிக்கக் கடற்படையின் பழைய கப்பல்களைப் பராமரிப்பதில் உள்ள சவால்களையும், பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளையும் விவாதத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஒரு போர்க்கப்பலில் மின்சாரமும், உந்துவிசை அமைப்பும் செயலிழந்தால், அந்த கப்பல் கடலின் நடுவே வெறும் இரும்புத் துண்டாகவே மாறிவிடும். அது தானாக நகர்வதற்கோ அல்லது எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கோ துளியும் வாய்ப்பில்லை. ஈரான் போர் சூழலில், அமெரிக்கக் கப்பல்கள் உலகெங்கிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகளும், தீ விபத்துகளும் அந்தப் படைகளின் செயல்திறனைப் பெருமளவு குறைத்திருக்கின்றன. இந்தத் தொடர் விபத்துக்கள் குறித்து அமெரிக்கக் கடற்படை தற்போது உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விபத்துக்களுக்குப் பின்னால் முறையற்ற பராமரிப்புப் பணிகள் காரணமா அல்லது திட்டமிட்ட சதி ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இத்தகைய ராணுவத் தளவாடங்களின் பாதுகாப்புச் சிக்கல், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. உலகின் மிக வலிமையான ராணுவத்தைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படையில், தொடர்ந்து இத்தகைய விபத்துக்கள் நிகழ்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
