அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது வரலாற்றில் முதன்முறையாக ‘டார்க் ஈகிள்’ ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரானுக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் இன்னும் தணியாத சூழலில், அமெரிக்கா தனது ராணுவ திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த அதிநவீன ஆயுதத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிக வேகத்தில் பாயும் இந்த ஏவுகணைகள், எதிரி ரேடார்களில் சிக்காமல் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா–ஈரான் உறவில் நேரடி மோதல் போக்கு நிலவுகின்றது. இரு நாடுகளும் ஒருவரின் நிபந்தனைகளை மற்றொருவர் ஏற்க மறுப்பதால், அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. இதனால் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ராணுவ அமைப்புகளை குறிவைத்து தாக்கும் நோக்கில் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய கமாண்டு (CENTCOM) தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இறுதி முடிவு குறித்து பென்டகன் இன்னும் அறிவிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இத்தகைய ஆயுதப் பயன்பாடு பிராந்திய நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சூழலில், மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் உலகளவில் பெரிய விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
