நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
மனுவில், 2021ஆம் ஆண்டு முதல் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக சந்தேகித்து மன உளைச்சல் ஏற்பட்டதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பல முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சிகள் செய்யப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரின் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி இருந்தனர். நீதிபதி, வழக்கில் தொடர்புடையவர்கள் எப்போது நேரில் ஆஜராகுவார்கள் என கேட்டபோது, ஜூன் மாதத்தில் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னர் அதே பதவியில் இருந்த சுஜாதா மீண்டும் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றமும் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
