பிரிட்டனையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது ஈரான் தூதரகத்தின் ஒரு சமூக வலைதளப் பதிவு. பிரிட்டனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை, நாட்டிற்காக ‘உயிரைத் தியாகம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால் கோபமடைந்த பிரிட்டன் அரசு, உடனடியாக ஈரான் தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டனில் உள்ள ஈரான் தூதரகம், அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளது. ‘ஜான் ஃபடா’ (Jan Fada) என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. ‘ஜான் ஃபடா’ என்றால், ‘உயிரை அர்ப்பணிப்பது’ அல்லது ‘உயிர்த் தியாகம் செய்வது’ என்று பொருள்.
அந்த டெலிகிராம் பதிவில், “ஈரானின் துணிச்சல் மிக்க மக்கள் அனைவரும், இந்த இயக்கத்தில் பங்கெடுத்து, நமது நாட்டின் பெருமைக்கு இன்னொரு பொன்னான பக்கத்தைச் சேர்க்க வேண்டும். உங்கள் இதயம், தாய்நாட்டின் பெருமையோடும், மாண்போடும் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு நிற்காமல், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து போரில் உயிரைக் கொடுப்போம். நமது நாட்டை எதிரியிடம் சரணடையச் செய்வதை விட இது மேலானது” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தி பரவியதும் பிரிட்டன் அரசு உச்சக்கட்ட கோபமடைந்தது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறிய பிரிட்டன் வெளியுறவுத்துறை, உடனடியாக ஈரான் தூதர் சையத் அலி மூசாவியை நேரில் அழைத்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
வெளிநாட்டில் வாழும் மக்களை இப்படி உயிர்த் தியாகம் செய்யத் தூண்டுவது, தீவிரவாத எண்ணங்களை விதைப்பது போலாகும் என்று பிரிட்டன் அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பிரிட்டனின் பாதுகாப்பு முகமைகள் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஆனால், ஈரான் தூதரகம் தன் செயலை நியாயப்படுத்தியுள்ளது. “இது வன்முறையைத் தூண்டும் செயல் அல்ல; இது வெறும் நாட்டுப்பற்று சம்பந்தப்பட்டது. உலகெங்கும் உள்ள ஈரானியர்கள் தங்கள் தாய்நாட்டின் மீது எப்போதும் பற்றுடன் இருப்பார்கள். தாய்நாட்டைப் பாதுகாப்பது குறித்த ஒரு பிரச்சாரம்தான் இது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவசரகதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்று ஈரான் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
உலக அளவில் ஈரான் சம்பந்தப்பட்ட பதட்டங்கள் ஏற்கனவே அதிகரித்து வரும் இந்தச் சூழலில், ஈரான் தூதரகத்தின் இந்த அழைப்பு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
