மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், உலக நாடுகளின் எரிசக்தி உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு மிகப்பெரிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் கடும் முற்றுகை மற்றும் ஈரானின் ராணுவக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சுமார் 500 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட ஒரு பிரம்மாண்ட ரஷ்ய சொகுசுக் கப்பல் எவ்விதத் தடையுமின்றி இந்தப் பாதையைக் கடந்து சென்றுள்ளது. “நோர்ட்” (Nord) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 465 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கப்பல், துபாய் துறைமுகத்தில் இருந்து கிளம்பி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டைச் சென்றடைந்துள்ளது. உலகமே அஞ்சும் ஒரு போர்க்களத்தை இவ்வளவு அசால்ட்டாக ஒரு சொகுசுக் கப்பல் கடந்து சென்றது சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பல் சாதாரணமானது அல்ல; இதில் 20 சொகுசு அறைகள், ஒரு பிரம்மாண்ட நீச்சல் குளம், ஹெலிகாப்டர் தளம் மற்றும் அவசர காலத்திற்காக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வசதி என ஒரு மிதக்கும் அரண்மனை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் உரிமையாளர் ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரரான அலெக்ஸி மொர்தாஷோவ் (Alexey Mordashov). இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்படுபவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஏற்கனவே கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் கப்பலுக்கு, ஈரான் இவ்வளவு பெரிய சலுகையை வழங்கியதுதான் இப்போதைய மர்மம். ஈரான் மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவும், சமீபத்தில் அவர்கள் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களுமே இதற்குக் காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்குச் சராசரியாக 140 கப்பல்கள் சென்று வந்தன. ஆனால் இப்போது அமெரிக்காவின் முற்றுகை மற்றும் ஈரானின் பிடிவாதத்தால் மிகச் சில வணிகக் கப்பல்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பயன்படுத்த முடிகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஒரு சொகுசுக் கப்பல் மட்டும் எவ்வித அச்சமுமின்றி வலம் வருவது, மத்திய கிழக்கில் ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. குறிப்பாக, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ்கோவில் புதினைச் சந்தித்துப் பேசி வரும் இதே தருணத்தில், ரஷ்யக் கப்பல் ஜலசந்தியைக் கடந்திருப்பது ஒரு மிக முக்கியமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி ரஷ்யா மற்றும் ஈரான் தங்களுக்குள் ஒரு ரகசியப் பாதையை உருவாக்கியுள்ளனவா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
