அமெரிக்காவை அலறவிடும் ஈரானின் ‘Fattah’ ஏவுகணை! களநிலவரம் என்ன?

மத்திய கிழக்கிற்குள் நுழைந்துள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்’ (USS George H.W. Bush) போர்க்கப்பல் தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஈரானின் ‘பத்தாஹ்’ (Fattah) எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, இந்த அமெரிக்கப் போர்க்கப்பலை மூழ்கடிக்கும் வல்லமை கொண்டதா? என்ற கேள்விதான் தற்போது உலக ராணுவ வல்லுநர்களிடையே பெரும் விவாதமாக உள்ளது.

ஈரான் தயாரித்துள்ள இந்த ‘பத்தாஹ்’ ஏவுகணைகள், ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் (Mach 15) சீறிப்பாயக்கூடியவை. இவை வழக்கமான ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை எளிதில் ஏமாற்றி இலக்கைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை, சரியான இலக்கைத் தாக்கி, போர்க்கப்பலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினால், அது அந்தப் பிரம்மாண்டமான கப்பலைச் செயலிழக்கச் செய்யவோ அல்லது மூழ்கடிக்கவோ வாய்ப்புள்ளது என்பது ராணுவ ஆய்வாளர்களின் கருத்து.

ஆனால், நிதர்சனம் என்னவென்றால், ஈரானின் இந்த மிரட்டல் எந்த அளவுக்குச் செயல்படும் என்பதுதான் கேள்வி. சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில், ஈரானின் பெரும்பாலான ஏவுகணை உற்பத்தி நிலையங்களும், நிலத்தடி ஏவுகணை மையங்களும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. அதாவது, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவும் ஈரானின் கட்டமைப்பு தற்போது பெரிய அளவில் சிதைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தனித்துச் செல்வதில்லை. ‘ஆர்க்லே பர்க்’ (Arleigh Burke) வகை டெஸ்ட்ராயர்கள் எப்போதும் அதன் பாதுகாப்பிற்குப் பின்னால் இருக்கும். இவற்றில் உள்ள ‘ஏஜிஸ்’ (Aegis) கவசமும், எஸ்.எம்-6 (SM-6) ஏவுகணை இடைமறிக்கும் அமைப்பும், இத்தகைய ஹைப்பர்சோனிக் அச்சுறுத்தல்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நடுவானிலேயே அழிக்கும் வல்லமை கொண்டவை.

ஆக, ஈரானின் பத்தாஹ் ஏவுகணை கோட்பாட்டு ரீதியாக ஆபத்தானதுதான், ஆனால் அமெரிக்காவின் நவீன தற்காப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு அது கப்பலைத் தாக்கும் என்பது மிகக் கடினமான காரியம் என்பதே தற்போதைய ராணுவ யதார்த்தம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News