‘தோற்பவர்கள் எங்களுக்கு ரூல்ஸ் போட முடியாது!’ – டிரம்பை அசிங்கப்படுத்திய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையறையின்றி நீட்டிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் மிகக் கடுமையாக கிண்டல் செய்ததோடு மட்டுமல்லாமல், இது ஒரு மிகப்பெரிய “சதித் திட்டம்” என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த போர்நிறுத்தத்தை தான் நீட்டிப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஈரானின் தற்போதைய தலைமை சிதறிப் போயிருப்பதாகவும், அவர்கள் தங்களின் அமைதித் திட்டத்தை முன்வைக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் ட்ரம்ப்பின் இந்த கருத்தை ஈரான் அப்படியே சுக்குநூறாக உடைத்திருக்கிறது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரின் மூத்த ஆலோசகர் மஹ்தி முகம்மதி (Mehdi Mohammadi) இதற்கு மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்திருக்கிறார்.

“போரில் தோற்றுப்போகும் நிலையில் இருக்கும் ஒரு நாடு, மற்றவர்களுக்கு விதிமுறைகளை விதிக்க முடியாது” என்று அவர் ட்ரம்பை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார். மேலும், ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த போர்நிறுத்தம் ஒரு ஏமாற்று வேலை என்றும், ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்த சமயம் பார்ப்பதற்கான ஒரு தந்திரம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க : சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு முக்கிய தகவல்! மத்திய அரசு வெளியிட்ட அப்டேட்!

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பக்கம் போர்நிறுத்தம் என்று சொன்னாலும், மறுபக்கம் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த முற்றுகையை ஈரான் குண்டுவீச்சுக்குச் சமமான ஒரு செயலாகவே பார்க்கிறது. இதற்கு ராணுவ ரீதியாக நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஈரான் பொருளாதார ரீதியாக முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த முற்றுகையினால் ஈரானுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், அங்குள்ள ராணுவம் மற்றும் காவல்துறைக்குச் சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் பணத்தேவைக்காகவே அவர்கள் இந்த முற்றுகையை நீக்க கெஞ்சுவதாகவும் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்தத் தொடர் மோதல்கள் காரணமாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தற்போது அந்தரத்தில் தொங்குகிறது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் செல்லவிருந்த பயணமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரானின் தரப்பிலிருந்து முறையான ஒரு அமைதித் திட்டம் வரும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.

Related News

Latest News