சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், மரத்வாடா முதல் குமரிக்கடல் வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) காணப்படுகிறது. இந்த அமைப்புகள் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில், அதேபோல் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதர பகுதிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் உள் தமிழக மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று முதல் 26ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும். எனினும், 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இணைந்து காணப்படும் சூழலில், கடலோர பகுதிகளில் அசௌகரியமான நிலை உருவாகலாம்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பநிலை காரணமாக மக்கள் வெப்ப அசௌகரியத்தை அனுபவிக்கக்கூடும்.
