தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்: நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ…

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் சென்றார்.

நாகர்கோவிலில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் அவர் பேரணி மேற்கொண்டார். இந்த பேரணியில் பிரதமருடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தென் தமிழகத்தில் அவர் பிரசாரம் செய்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பேரணியின் மூலம் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலை மேலும் தீவிரமடையும் எனவும் கணிக்கப்படுகிறது.

Related News

Latest News