ராஜஸ்தானில் கடந்த ஐந்து நாட்களில் மர்ம காய்ச்சல் காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சலம்பர் மாவட்டத்தின் லால்புரா மற்றும் காட்டா கிராமங்களைச் சேர்ந்த 2 முதல் 4 வயதுடைய குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்–தம்பி உட்பட ஐந்து குழந்தைகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் மரணங்களின் காரணம் இதுவரை தெளிவாக தெரியாத நிலையில், மருத்துவக் குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்ட இரு கிராமங்களிலும் உள்ள சுமார் 560 குடும்பங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இதே போன்ற அறிகுறிகளுடன் மேலும் எட்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள கால்நடை தொழுவங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
