இந்தியாவில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. சுங்கச்சாவடிகள் தொடர்பாக அடிக்கடி புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வாகன ஓட்டிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பணமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இனிமேல், வாகன ஓட்டிகள் FASTag அல்லது டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்பு FASTag இல்லாமல் பணமாக கட்டணம் செலுத்தினால், இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணப் பரிவர்த்தனை முறையை நீக்கும் காரணம் என்னவெனில், FASTag முறை அமலுக்கு வந்தபோதும், சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது கணக்கில் பணம் இல்லாமை போன்ற காரணங்களால் வாகன ஓட்டிகள் பணமாக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் உருவாகி, வாக்குவாதங்கள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும், சிலர் போலியான அடையாளங்களை பயன்படுத்தி கட்டணம் தவிர்க்கும் சம்பவங்களும் நடந்தன. இதை கட்டுப்படுத்துவதற்காக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளை கடக்கும் அனைத்து வாகனங்களிலும் FASTag கட்டாயமாக இருக்க வேண்டும். FASTag இல்லாதவர்கள் அல்லது அதில் பணம் இல்லாதவர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
அபராத விதிகளில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. இனி பணமாக கட்டணம் செலுத்தும் வாய்ப்பு இல்லை. FASTag இல்லாதவர்கள் அல்லது அது செயல்படாத சூழ்நிலையில் UPI மூலம் கட்டணம் செலுத்தும்போது, வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும்.
FASTag தொழில்நுட்ப கோளாறால் செயல்படாத சூழலில், வாகனங்கள் உடனடியாக செல்ல அனுமதிக்கப்படும். பின்னர், அந்த வாகனத்தின் பதிவு எண்ணின் அடிப்படையில் உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு இ-சலான் அல்லது இ-நோட்டீஸ் அனுப்பப்படும். இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கும் அறிவிப்பின் அடிப்படையில், வாகன ஓட்டிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
இந்த இ-நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் (3 நாட்களில்) கட்டணம் செலுத்தினால், எந்த அபராதமும் இல்லாமல் வழக்கமான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். 72 மணி நேரத்திற்கு பிறகு செலுத்தினால் இரட்டிப்பு கட்டணம் விதிக்கப்படும். மேலும், 15 நாட்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாதவர்களின் விவரங்கள் வாஹன் சிஸ்டம்-இல் பதிவு செய்யப்படும். அதன் பிறகு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே, தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் முன் FASTag-ல் போதுமான இருப்பை வைத்திருப்பது நல்லது.
