தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்குத் நீதி கோரி, மாணவியின் உடலை பெற மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில், சாயல்குடி சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முனீஸ்வரனைப் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் கீழஈரால் பகுதியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கிலும் இவர் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த அவர், பிணையில் வெளியே வந்தபோது மீண்டும் இந்த கொலையை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல் நிலையத்தில் கையெழுத்திட வருகை தந்தபோது, வேடநத்தம் பகுதியில் மாணவியை கொலை செய்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு பிறகு, விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில், குடும்பத்தினர் மாணவியின் உடலைப் பெற சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
