இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே., கூகுள் பிளே ஸ்டோரில் சாட்ஜிபிடியை முந்திய இந்தியன் ஆயில் நிறுவனம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போரின் காரணமாக உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால், இந்த போரின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படுகிறது. இதன் விளைவாக நாட்டில் எரிவாயு பற்றாக்குறை உருவாகியுள்ளது.

குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கிடைக்காமல் இருப்பதால் பல ஹோட்டல்கள் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீட்டு சமையலுக்கான எரிவாயு சிலிண்டர்கள் கிடைத்தாலும், மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தால் அதிக அளவில் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

செல்போன் எண்ணை பயன்படுத்தி வழக்கமாக சிலிண்டர் புக் செய்ய முடியவில்லை என்று பலர் கூறுவதால், ஆயில் நிறுவனங்களின் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் “இந்தியன் ஆயில் ஒன்” செயலி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

நீண்ட காலமாக அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரபல செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளி, தற்போது இந்தியன் ஆயில் ஒன் செயலி முன்னிலையில் உள்ளது.

Related News

Latest News