வந்தாச்சு செம அப்டேட்., குரோம் பிரவுசரில் கூகுளின் மாஸ்டர் பிளான்

கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குரோம் பிரவுசர் இனி மேலும் புத்திசாலித்தனமாக செயல்படும். பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும்.

இந்த புதிய வசதி தற்போது இந்தியாவில் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசரின் வலதுபுறத்தில் ஒரு புதிய சைட்பார் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த சைட்பாரில் ஜெமினி AI உதவியாளர் இருக்கும். நீங்கள் எந்த இணையதளத்தைப் படித்துக்கொண்டிருந்தாலும், அந்தப் பக்கத்தை விட்டு வெளியேறாமல் அதே இடத்தில் ஜெமினியிடம் கேள்விகள் கேட்டு தகவல்களைப் பெறலாம். இதனால் தேடுதல் செயல்முறை எளிதாகவும், வேகமாகவும் மாறும்.

மேலும், நீளமான கட்டுரைகள் அல்லது பிளாக் பதிவுகளைப் படிக்க நேரமில்லாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். குரோம் சைட்பாரில் உள்ள ஜெமினியிடம் ‘Summarize’ என்று கேட்டால், அந்த இணையப் பக்கத்தில் உள்ள முக்கிய தகவல்களை சில வரிகளில் சுருக்கமாக வழங்கும். இது மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல், ‘Compare Tabs’ என்ற புதிய வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அல்லது ஒரு பயணத்தை திட்டமிடும்போது பல டேப்களை திறந்து வைத்திருப்போம். அப்போது வெவ்வேறு டேப்களில் உள்ள தகவல்களை ஜெமினி AI மூலம் எளிதாக ஒப்பிடலாம். உதாரணமாக, இரண்டு வெவ்வேறு மொபைல் போன்களின் அம்சங்களை ஒப்பிடச் சொன்னால், ஜெமினி அவற்றை அட்டவணையாக தொகுத்து காட்டும்.

இந்திய பயனர்களுக்காக கூகுள் ஒரு முக்கிய மாற்றத்தையும் செய்துள்ளது. ஜெமினி AI தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் செயல்படும். இதனால் ஆங்கிலம் தெரியாதவர்களும் தங்கள் தாய்மொழியிலேயே கேள்விகளை கேட்டு பதில்களைப் பெற முடியும்.

மேலும், இந்த வசதி டெஸ்க்டாப் மட்டுமின்றி ஐபோன் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற கூகுளின் பிற சேவைகளுடனும் இது இணைந்து செயல்படும். இதன் மூலம் குரோம் பிரவுசரிலிருந்தே மின்னஞ்சல்களை எழுதவும், யூடியூப் வீடியோக்களின் சுருக்கத்தைப் பெறவும் முடியும்.

Related News

Latest News