உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘எக்ஸ்’ தளம் திகழ்கிறது. சுமார் 586 மில்லியன் பயனர்களும், இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் பயனர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் பதிவுகள் கட்டுப்பாடின்றி பரவி வருவதாக நீண்ட காலமாக பயனர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர். குறிப்பாக, இத்தகைய உள்ளடக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த சூழலில், பயனர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு ‘எக்ஸ்’ நிறுவனம் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த கட்டுப்பாடு குறித்து பயனர்கள் ‘எக்ஸ்’ தளத்தின் செயற்கை நுண்ணறிவு வசதியான ‘க்ரோக்’ ஏ.ஐ.யிடம் கேட்டபோது, இனி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய பயனர்களுக்கு காட்டப்படமாட்டாது என்றும், இந்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
