ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் பரப்பளவு மற்றும் அந்நாட்டின் தற்போதைய ராணுவ நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடு திட்டமிடப்பட்டதாக அவர் விளக்கினார். தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், இந்த போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். அவர்கள் சிறந்த வீரர்கள் என புகழ்ந்த அவர், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை என்றாலும் தவிர்க்க முடியாதவை எனக் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது, “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள்; ஆனால் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்தார். தற்போதைக்கு தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான் பதிலடி தாக்குதல் மேற்கொண்டால், அதற்கு இதுவரை உலகம் காணாத அளவுக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
