“ஈரான் தேசமே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது! கடந்த 37 ஆண்டுகளாக ஈரானின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகையே உலுக்கியுள்ளது.
பிப்ரவரி 28, 2026 அன்று நள்ளிரவு நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அந்த ஒற்றை அறிவிப்பு, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பதற வைத்திருக்கிறது. ‘எங்கள் தலைவர் தியாகத் திருநாட்டின் அமிர்தத்தை பருகிவிட்டார், அவர் இறைவனின் உன்னத சாம்ராஜ்யத்தை அடைந்துவிட்டார்’ என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமேனியின் மறைவு ஈரானில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ள நிலையில், அந்தப் பெரும் பொறுப்பை சுமக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக ‘அயதுல்லா அலிரேசா அரஃபி’ நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த அரஃபி? 1959-ல் ஈரானின் மைய்போத் மாகாணத்தில் பிறந்த இவர், சாதாரண நபர் அல்ல. ஈரானின் ஆன்மீகத் தலைநகரான ‘கோம்’ நகரில் கல்வி கற்று, இஸ்லாமிய சட்டங்களைச் சுயாதீனமாக வெளியிடும் ‘முஜ்தஹித்’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்றவர்.
மறைந்த தலைவர் கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் அரஃபி, ஈரானின் சக்திவாய்ந்த அமைப்பான ‘கார்டியன் கவுன்சில்’ மற்றும் மதகுருமார்களை உருவாக்கும் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தவர். ஈரானின் மதக் கோட்பாடுகளையும், அரசியலையும் ஒருங்கே கையாளும் வல்லமை படைத்தவர் இவர் என்று கூறப்படுகிறது. ஈரானிய அரசியலமைப்புச் சட்டப்படி, புதிய நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்காலத் தலைவராக அரஃபி செயல்படுவார்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழலில், ஈரானின் ராணுவம், அரசியல் மற்றும் மதக் கட்டமைப்பை அரஃபி எப்படி வழிநடத்தப் போகிறார் என்பதுதான் உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
‘ஈரானின் மதக்கல்லூரிகள் புரட்சிகரமாகவும், அரசியல் ரீதியாகவும் செயல்பட வேண்டும்’ என ஏற்கனவே முழங்கிய அரஃபி, இனி வரும் காலங்களில் எடுக்கப்போகும் முடிவுகள், மத்திய கிழக்கில் அமைதியைத் தருமா அல்லது அடுத்தக்கட்ட போருக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 1979 புரட்சிக்குப் பிறகு ஈரான் காணும் இரண்டாவது மாபெரும் தலைமை மாற்றம் இதுதான்!”
