பான் கார்டு, வங்கி முதல் காப்பீடு வரை.. மாறப்போகும் புது விதிகள்! உஷாரா இருங்க மக்களே!!

இந்தியாவின் நிதித்துறை ஒரு முக்கியமான மாற்றத்தைக் நோக்கி முன்னேறி வருகிறது. 1961ஆம் ஆண்டு அமலுக்கு வந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, காலத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் “புதிய வருமான வரிச் சட்டம் 2025” உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது உள்ள 511 விதிகள் 333 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 399 படிவங்கள் 190 ஆகச் சுருக்கப்பட்டுள்ளன. இது நடைமுறைகளை எளிமைப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பான் கார்டு பயன்பாடு, வங்கி பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல் போன்ற தினசரி செயல்பாடுகளில் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

முதலில் வங்கி மற்றும் அஞ்சலக பரிவர்த்தனைகள் குறித்து பார்ப்போம். இதுவரை 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் செலுத்துதல் அல்லது பெறுதல் மேற்கொண்டால் பான் கார்டு வழங்குவது கட்டாயமாக இருந்தது. ஆனால் புதிய சட்டத்தின் படி, ஒரு நிதியாண்டில் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு அவசியமில்லை. 10 லட்சத்தைத் தாண்டும் போது மட்டுமே அது கட்டாயமாகும். இது சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்றே இலகுவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து ஹோட்டல்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தொடர்பான மாற்றம். தற்போதைய நடைமுறையில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை செலுத்தினால் பான் கார்டு விவரம் வழங்க வேண்டும். ஆனால் இனி இந்த வரம்பு 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் திருமணம் மற்றும் பெரிய விழாக்கள் நடத்துவோருக்கு சற்று சுலபமாக இருக்கும்.

சொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய மாற்றமும் உள்ளது. தற்போது 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள நிலம் அல்லது வீடு வாங்கினால் பான் கார்டு கட்டாயம். புதிய சட்டத்தில் இந்த வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 20 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கும்போது அல்லது பரிசாக வழங்கும்போது பான் கார்டு விவரம் அளிக்க வேண்டும். வாகனங்கள் தொடர்பாக, கார் வாங்கும்போது பான் கார்டு கட்டாயம் என்பது தொடர்கிறது. ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பான் கார்டு தேவைப்படும். விவசாயிகளுக்காக டிராக்டர் வாங்கும்போது பான் கார்டு தேவையில்லை என்ற விதிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு துறையில் முக்கியமான மாற்றம் ஒன்று உள்ளது. இனிமேல் எந்தவொரு காப்பீட்டு பாலிசி எடுத்தாலும் பான் கார்டு கட்டாயம். இது நிதி பரிவர்த்தனைகளை முறையாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் வழங்கும் நஷ்டஈட்டுத் தொகையின் வட்டிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தொகை முழுமையாக கிடைக்கும்.

இந்த புதிய வருமான வரிச் சட்டம் 2025 என்பது வெறும் எண்கள் மாற்றம் அல்ல. இது வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்தி, மின்மயமாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. தற்போது வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன; மக்களிடமிருந்து கருத்துகளும் பெறப்படுகின்றன.

2026 ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வந்தபின், ஆவணச் செயல்முறைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிப்பு வரம்பிற்குள் வரும் என்பதும் கவனிக்கத்தக்கது.

Related News

Latest News