Wednesday, February 25, 2026

சிறையும் போராட்டங்களும் நிறைந்த நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு

1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் ராமசாமி–கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற அவர், பள்ளி ஆசிரியரான பலவேசம் மூலம் பொதுவுடைமை சிந்தனைகளை அறிந்தார்.

சிறையும் போராட்டங்களும் நிரம்பிய வாழ்க்கையை வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் உரிமைப் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான இயக்கம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனப் பல சமூக, அரசியல் இயக்கங்களில் அவர் செயற்பட்டார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை போராட்டங்களிலும் சிறை வாழ்க்கையிலும் கழித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களோடு மட்டுமல்லாமல், பிற கட்சித் தலைவர்களும் அவரை அன்புடன் ‘தோழர் ஆர்.என்.கே’ என்று அழைத்தனர். அவரது நூற்றாண்டு விழா சென்னை நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

1937 ஆம் ஆண்டு, 12 வயதிலேயே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அரசியல் வாழ்க்கையின் முதல் அடியை எடுத்தார். 1938 ஆம் ஆண்டு ஹார்வி ஆலை வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்களுக்காக அரிசி திரட்டியதோடு, 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட நாடகத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்றிணைத்ததும் அவரது இளம் வயதிலேயே போராட்ட மனப்பாங்கை வெளிப்படுத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளிலேயே கிளைச் செயலாளராக பொறுப்பு ஏற்றார். 1948 ஆம் ஆண்டு ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கோஷத்துடன் கட்சி முன்னெடுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறைவாசத்திற்குப் பிறகு அன்னசாமி என்பவர் தனது மகள் ரஞ்சிதத்தை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணம் 1958 ஆம் ஆண்டு நடைபெற்றது.

சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களில் அவரது மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டபோதும், “உள்ளூர்வாசிகள் செய்திருக்க மாட்டார்கள்” எனக் கூறி கலவரம் மேலும் பெரிதாகாமல் தடுக்க முயன்றார். மாமனாரின் மரணத்திற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக வழங்கிய அவரது மனப்பான்மை பெரும் பாராட்டைப் பெற்றது.

தனது 80வது பிறந்தநாளில் கட்சி வசூலித்து வழங்கிய ஒரு கோடி ரூபாயை மீண்டும் கட்சிக்கே திருப்பி அளித்தார். 2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேரில் ஆஜராகி வாதாடி தடை உத்தரவு பெற்றார். ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பெயரில் நடந்த மணல் எடுப்பிற்கும் எதிராக போராடினார்.

1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதும், 2022 ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. உலக அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவர் எனப் பாராட்டப்பட்டு உலக சாதனை விருதும் வழங்கப்பட்டது.

101 வயதை கடந்தும் வாழ்க்கையின் இறுதி நாட்களில் இயற்கையுடன் போராடிக் கொண்டிருந்த நல்லகண்ணு, இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார் நல்லகண்ணு அய்யா.சமூகநீதி, மனிதநேயம், தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக வாழ்ந்த அவர், நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்.

Related News

Latest News