Wednesday, February 25, 2026

ஈரான் தலைக்கு மேல் 150 போர் விமானங்கள்! சுற்றி வளைத்த அமெரிக்கா! என்ன நடக்கிறது ?

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மிகத் தீவிரமாகச் சூழத் தொடங்கியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பரபரப்பான சூழலில், தற்போது வெளியாகியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் உலகையே அதிர வைத்துள்ளது.

சுமார் 150-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் ஈரானை மிக நெருக்கத்தில் சுற்றி வளைத்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிகப்பெரிய ராணுவக் குவிப்பு இது என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானைச் சுற்றியுள்ள ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில், சரக்கு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அதிநவீன போர் விமானங்கள் எனப் பெரும் படை திரட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரேடார்களில் சிக்காமல் பறந்து சென்று தாக்கும் 12 ‘எஃப்-22’ (F-22) ஸ்டெல்த் போர் விமானங்கள் இங்கிலாந்தில் இருந்து ஈரான் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் எஃப்-35 (F-35), எஃப்-15 (F-15) மற்றும் எஃப்-16 (F-16) ரக விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

கடல் மார்க்கமாக அமெரிக்காவின் மிக வலிமையான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு (USS Gerald R. Ford) ஆகிய இரண்டு பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பல்கள் ஈரானை குறிவைத்து மிக அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராகக் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். ஜெனிவாவில் (Geneva) நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், அமெரிக்காவின் அடுத்த அடி ராணுவ நடவடிக்கையாகத்தான் இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மஜித் தக்த் ரவான்ச்சி (Majid Takht-Ravanchi) கூறுகையில், அமெரிக்காவுடன் ஒரு நேர்மையான ஒப்பந்தத்தை எட்ட ஈரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய சூதாட்டமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.

“போரைத் தவிர்க்க வேண்டும் என்றால், போருக்குத் தயாராக இருக்க வேண்டும்” என ஈரானிய தூதர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Related News

Latest News