இன்றைய டிஜிட்டல் உலகில் ரீல்ஸ் மற்றும் குறும்பட வீடியோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரியவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் கற்றல் திறனை பாதிக்கும் அபாயம் உள்ளது.
All India Institute of Medical Sciences Raipur வெளியிட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் சராசரியாக 2.22 மணி நேரம் திரை முன் செலவிடுகின்றனர். World Health Organization மற்றும் Indian Academy of Pediatrics பரிந்துரைகளின்படி, 2 வயது வரை குழந்தைகளுக்கு ஸ்கிரீன் டைம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு பெற்றோர் மேற்பார்வையில் அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
தினமும் நீண்ட நேரம் ரீல்ஸ் அல்லது குறுகிய நேர வீடியோக்கள் பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகள்:
உரையாடல் சிக்கல்
குழந்தைகளை அமைதிப்படுத்த மொபைல் வீடியோக்கள் காட்டும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பெற்றோர்-குழந்தை நேரடி உரையாடல் குறைகிறது. National Library of Medicine வெளியிட்ட ஆய்வுகளின்படி, அதிக திரை நேரம் பேசுவதில் தாமதம், உச்சரிப்பு தெளிவின்மை மற்றும் புரிதல் திறன் குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கவனம் செலுத்தும் திறன் குறைதல்
குறுகிய நேர வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதால், ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் திறன் குறையலாம். உடனடி சுவாரஸ்யம் தரும் விஷயங்களில் மட்டும் மூளை ஈர்க்கப்படும். இதனால் புத்தகம் படித்தல், படைப்பாற்றல் விளையாட்டுகள் போன்றவற்றில் ஆர்வம் குறையும்.
தூக்கக் கோளாறு
படுக்கைக்கு முன் மொபைல் பார்ப்பது தூக்க சுழற்சியை பாதிக்கிறது. திரையில் இருந்து வரும் நீல ஒளி மெலட்டோனின் உற்பத்தியை குறைத்து தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது. இதனால் தாமதமாக தூங்குதல், தரமற்ற தூக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
நடத்தை மாற்றங்கள்
அதிக திரை நேரம் குழந்தைகளின் உணர்ச்சி கட்டுப்பாட்டை பாதிக்கலாம். சில ஆய்வுகள் இது கவனம் சிதறல் மற்றும் ADHD போன்ற நடத்தைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறுகின்றன. வன்முறை உள்ளடக்கம் குழந்தைகளின் நடத்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல்நல பிரச்சனைகள்
நீண்ட நேரம் திரை பயன்படுத்துவதால் கண் எரிச்சல், வறண்ட கண்கள், மங்கலான பார்வை மற்றும் தலைவலி ஏற்படலாம். சிறு வயதிலேயே மயோப்பியா அபாயமும் அதிகரிக்கலாம். உடல் இயக்கம் குறைவதால் உடற்பயிற்சி குறையும்.
கோபம் மற்றும் பிடிவாதம்
மொபைலை அதிகமாக பயன்படுத்தும் குழந்தைகள், அதை அகற்றும் போது கத்துதல், அழுதல், கடும் எதிர்ப்பு காட்டுதல் போன்ற நடத்தைகளை வெளிப்படுத்தலாம்.
பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் காட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் மட்டுமே, அதுவும் பெற்றோர் மேற்பார்வையில் அனுமதிக்க வேண்டும்.
நல்ல தரமான, கற்றலுக்குப் பயனுள்ள உள்ளடக்கத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
படுக்கைக்கு ஒரு மணி நேரம் முன்பு திரை பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
கதை சொல்லுதல், புத்தகம் வாசித்தல், மென்மையான இசை கேட்பது போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.
வெளிப்புற விளையாட்டு மற்றும் குடும்ப உரையாடலை அதிகரிக்க வேண்டும்.
ஸ்கிரீன் டைமர், ஆட்டோ-பிளே ஆஃப், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம்.
மிக முக்கியமாக, பெற்றோர்கள் தாமே முன்மாதிரியாக இருந்து தங்களின் மொபைல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
