இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் இனி ரொக்கப் பணம் இல்லாமலேயே, இந்தியாவின் Unified Payments Interface (யுபிஐ) முறையை பயன்படுத்தி எளிதாக பணம் செலுத்த முடியும். இதற்காக National Payments Corporation of India (என்.பி.சி.ஐ) ‘யு.பி.ஐ. ஒன் வேர்ல்ட்’ (UPI One World) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புது தில்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் ‘இந்தியா ஏ.ஐ. இம்பாக்ட் சமிட் 2026’ மாநாட்டில் பங்கேற்க 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்காக இந்த சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
யு.பி.ஐ. ஒன் வேர்ல்ட் என்பது என்ன?
வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில், இந்திய வங்கி கணக்கு அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் ஒரு சிறப்பு வாலட் சேவையாகும். வழக்கமாக, வெளிநாட்டு பயணிகள் இந்திய ரூபாய்க்கு பணத்தை மாற்றி ரொக்கமாக வைத்திருப்பார்கள் அல்லது சர்வதேச கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது ஒரு சிறிய டீக்கடையிலிருந்து பெரிய வணிக வளாகம் வரை எங்கும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்த முடியும்.
இந்த சேவையை பெறுவது எப்படி?
சர்வதேச பயணிகள் கீழ்க்கண்ட எளிய படிகளை பின்பற்ற வேண்டும்:
Transcorp நிறுவனத்தின் CheqUPI செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
செயலியில் செல்ஃபி புகைப்படம் எடுத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
தனிப்பட்ட யுபிஐ பின் எண்ணை உருவாக்க வேண்டும்.
சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டும்.
இவற்றை முடித்ததும், இந்தியா முழுவதும் யுபிஐ மூலம் பணம் செலுத்த தயாராகிவிடலாம்.
பரிவர்த்தனை வரம்பு:
ஒருமுறை அதிகபட்சமாக ₹25,000 வரை வாலட்டில் ஏற்ற முடியும். மாதத்திற்கு மொத்தம் ₹50,000 வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணம் முடிந்து தாயகம் திரும்பும்போது, வாலட்டில் மீதமுள்ள தொகையை தங்களின் சொந்த வங்கி கணக்கிற்கே மாற்றிக்கொள்ளலாம்.
என்.பி.சி.ஐ வளர்ச்சிப் பிரிவு நிர்வாக இயக்குநர் சோகினி ரஜோலா கூறுகையில், “யுபிஐ என்பது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பு. சர்வதேச பிரதிநிதிகளுக்கு இந்த வசதியை வழங்குவதன் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அவர்கள் நேரடியாக அனுபவிக்க முடிகிறது” என்றார்.
கடந்த ஜனவரி 2026 மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 21.70 பில்லியன் (2,170 கோடி) பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ₹28.33 லட்சம் கோடி ஆகும். உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பாக விளங்கும் யுபிஐ, தற்போது சர்வதேச அளவிலும் விரிவடைந்து வருவது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
