2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருப்பதே ஆகும். பொதுவாக மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பாக வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தங்க கொள்முதல் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதில் முன்னணியில் இருப்பது சீனாவே.
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து, தங்களது நாட்டு நாணயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே சீனாவின் முக்கிய நோக்கம். இதற்காக சீனா அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி சேமிக்கத் தொடங்கியது. இந்த நடவடிக்கையே உலக தங்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சீன மத்திய வங்கி தொடர்ந்து 15வது மாதமாக தங்கத்தை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, சீன மத்திய வங்கியிடம் 74.19 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸ் தங்கம் இருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய மாதத்தில் இது 74.15 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸ்களாக இருந்தது. டிசம்பர் மாத இறுதியில் சீனாவிடம் இருந்த தங்கத்தின் மதிப்பு 319 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது அது 369.58 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுடன் நிலவும் வர்த்தக மோதல்கள் மற்றும் பல்வேறு உலக பொருளாதார பதற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து தங்கள் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், டாலரை சார்ந்திருப்பதை குறைத்து தங்க இருப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான ஒரு பகுதியாகவே தொடர்ந்து 15வது மாதமாக தங்கம் வாங்கி வருகிறது.
சீன மத்திய வங்கி மட்டுமல்லாமல், அந்நாட்டு பொதுமக்களும் தங்கத்தை அதிகமாக வாங்க வேண்டும் என்று அரசு ஊக்குவித்துள்ளது. சீனாவில் தற்போது ஈடிஎஃப் முதலீடுகளை விட, தங்கத்தை நேரடியாக உலோகமாக வாங்கி சேமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதேபோல், சர்வதேச சந்தை விலையை விட கூடுதல் விலை கொடுத்து வெள்ளியையும் மக்கள் உலோக வடிவிலேயே வாங்கி வைத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீன அரசு தங்கம் வாங்குவதை நிறுத்தவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால், இந்த ஆண்டும் தங்கத்தின் விலையை உயர்த்தும் முக்கிய காரணியாக இது தொடரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலாக, போலந்து உள்ளிட்ட சில நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த ஆண்டில் கூடுதலாக தங்கம் வாங்க முடிவு செய்துள்ளன.
உலகளவில் மத்திய வங்கிகளின் தங்க தேவையே அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருப்பதால், அவர் எப்போது எந்த வர்த்தக அறிவிப்பை வெளியிடுவார் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தங்கத்தின் விலை மிக வேகமாக உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
