ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 31-ம் தேதி ஒரு விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ஆஷிஷ் (25) என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், அவரது மனைவி அஞ்சலி மயக்க நிலையில் அருகில் இருந்ததையும் கண்டனர். உடனடியாக ஆஷிஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அஞ்சலியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆஷிஷ் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவர் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையின் போது அஞ்சலி கூறிய தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. முதலில் விபத்து நடந்ததாகவும், பின்னர் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் தாக்கியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அஞ்சலி தனது கள்ளக்காதலன் சஞ்சயுடன் சேர்ந்து கணவர் ஆஷிஷை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆஷிஷ் – அஞ்சலி தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அஞ்சலி சஞ்சயுடன் காதல் உறவில் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவை தொடர்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அஞ்சலி சஞ்சயை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இதனால் தங்கள் காதலுக்கு தடையாக இருந்த ஆஷிஷை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி சம்பவத்தன்று, அஞ்சலி நடைபயிற்சி செல்வதாக கூறி கணவர் ஆஷிஷை அழைத்து சென்றுள்ளார். முன்கூட்டியே திட்டமிட்ட இடத்தில் சஞ்சய், அவரது நண்பர்கள் ரோஹித் (என்கிற ராக்கி) மற்றும் பாதல் (என்கிற சித்தார்த்) ஆகியோர் புதர்களில் மறைந்து காத்திருந்தனர். ஆஷிஷ் வந்ததும், மூவரும் சேர்ந்து அவரை கம்பி மற்றும் கடையால் தாக்கினர். இதில் கீழே விழுந்த ஆஷிஷின் கழுத்தை மப்ளரால் நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் ஆஷிஷின் செல்போன் மற்றும் நகைகளை அஞ்சலி சஞ்சயிடம் கொடுத்து தப்பிச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன் பின்னர், தானும் மயங்கி விழுந்தது போல நடித்து, தங்கள் மீது கார் மோதியதாகவும், மர்ம நபர்கள் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதாகவும் நாடகம் ஆடியுள்ளார்.
இந்த அனைத்து தகவல்களும் போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அஞ்சலி, சஞ்சய், ரோஹித் மற்றும் சித்தார்த் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
