Wednesday, February 4, 2026

15 நாட்களில் 800 பேர் மாயம்., நடுங்கும் டெல்லி, பதறவைக்கும் புள்ளிவிவரம்

தேசிய தலைநகரான டெல்லியில், 2026ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக 54 பேர் மாயமாகி வருவது தெரிய வருகிறது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக காணாமல் போவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனவர்களில் 191 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 169 பேர் பதின்ம வயதினர்கள் ஆகும். இதில் 138 சிறுமிகளும், 31 சிறுவர்களும் அடங்குவர். மேலும், 8 முதல் 12 வயது வரையிலான 13 சிறுவர்களும், 8 வயதிற்குள் உள்ள 9 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 6 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக, காணாமல் போன பதின்ம வயதினர்களில் 71 சதவீதம் பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் உள்ளனர்.

சமீபத்திய தகவல்களின்படி, ஜனவரி 27ஆம் தேதி வரை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு முழுவதையும் கணக்கில் எடுத்தால், டெல்லியில் மொத்தம் 24,508 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதாவது 14,870 பேர் பெண்கள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக டெல்லி காவல்துறை ‘ஆபரேஷன் மிலாப்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனியாக காணப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு காப்பகங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் போனவர்களின் விவரங்களை பதிவு செய்யவும், சரிபார்க்கவும் அரசாங்கத்தின் ZIPNET இணையதளத்தை பயன்படுத்தலாம். ஒருவர் காணாமல் போனால், “24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்” என்ற தவறான எண்ணத்தை கைவிட்டு, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். முதல் சில மணிநேரங்கள் மீட்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானவை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளுக்கு தங்கள் பெயர், பெற்றோர் பெயர், தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி போன்ற அடிப்படை தகவல்களை கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News