மத்திய பிரதேச மாநிலத்தில் நச்சுத் தன்மை கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் கோமா நிலைக்கு சென்ற 4 வயது சிறுவன், நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுவன், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கோமா நிலையில் இருந்து வந்தார். அவரை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெதுல் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் ஹர்மேட் கூறுகையில், “சிறுவனின் உடல் நாக்பூரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.
