கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி (57) என்ற மூதாட்டி. இவர் தனது பேரனுக்காக தனது பெயரில் புதிதாக ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த ஜேசிபியை பேரன் சிரஞ்சீவி பராமரித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணி தனது சொந்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பேரன் சிரஞ்சீவி, ஜேசிபிக்கு எடுத்த கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த பணம் கேட்டுள்ளார். ஆனால், ராணி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, ஜேசிபி இயந்திரம் மூலம் ராணியின் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த ராணியின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
