Sunday, January 25, 2026

‘சஞ்சு சாம்சன் கதை முடிஞ்சுதா?’ உலகக்கோப்பை வின்னர் எழுப்பிய பகீர் கேள்வி!

“சஞ்சு சாம்சனா? அல்லது இஷான் கிஷனா?” இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவையே தலைசுற்ற வைத்திருக்கிறது அந்த ஒரு இன்னிங்ஸ்! நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நடந்த சம்பவங்கள், இப்போது சஞ்சு சாம்சனின் இடத்துக்கே உலை வைக்கும் அளவுக்கு விபரீதமாக மாறியுள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இந்திய அணியில் மிகப்பெரிய ‘இடியாப்ப சிக்கல்’ உருவாகியுள்ளது.

நடந்து முடிந்த இரண்டாவது டி20 போட்டியில், இளம் வீரர் இஷான் கிஷன் ஆடிய ஆட்டம் சும்மா சரவெடி! திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் கிடைத்த வாய்ப்பை, கெட்டியாகப் பிடித்துக்கொண்ட இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 76 ரன்களை விளாசித் தள்ளினார். 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மைதானத்தையே அதிர வைத்தார். ஆனால், மறுமுனையில் நடந்தது என்ன? அணியின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், முதல் போட்டியில் 10 ரன்களும், இரண்டாவது போட்டியில் வெறும் 6 ரன்களும் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார். இதுதான் இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பேசிய 1983 உலகக்கோப்பை வின்னர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சஞ்சு சாம்சன் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? இரண்டாவது பந்திலேயே கேட்ச் டிராப் ஆகி ஒரு உயிர் கிடைத்தும், நான்காவது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுக்கிறார். அவருக்குப் பொறுமை இல்லை, பேராசைப்படுகிறார்,” என்று சீக்கா விளாசியுள்ளார். ஒருமுறை கண்டம் தப்பிய பிறகு, ஸ்ட்ரைக்கை ரோட்டேட் செய்து செட்டில் ஆகாமல், அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டை இழந்தது முட்டாள்தனம் என்று அவர் சாடியுள்ளார்.

இப்போதுதான் முக்கியமான கேள்வியே வருகிறது. காயத்தில் இருக்கும் திலக் வர்மா அணிக்குத் திரும்பினால், வெளியே போகப்போவது யார்? இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. “இஷான் கிஷன் ரன் குவிப்பது சஞ்சுவுக்குத் தெரியும், அந்தப் பயம் அவரிடம் தெரிகிறது. சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் என வரிசையாக வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, கிடைத்த வாய்ப்பை சஞ்சு இப்படி வீணடிப்பது அவருடைய கேரியருக்கே ஆபத்து,” என்று எச்சரித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

அடுத்த இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் தன்னை நிரூபிக்காவிட்டால், டி20 உலகக்கோப்பையில் அவர் தண்ணீர் சுமக்க வேண்டியதுதான் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

Related News

Latest News