இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு, பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு மிகப்பெரிய பேரிடி செய்தி காத்திருக்கிறது. இத்தனை நாளா இந்திய அணியின் தூண்களாக இருந்த இவர்களுடைய சம்பளத்தில், பிசிசிஐ கை வைக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் சாதாரண குறைப்பு இல்லை, அவர்களுடைய “கிரேட்” (Grade) அந்தஸ்தையே குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
விஷயம் என்னவென்றால், பிசிசிஐயின் சென்ட்ரல் கான்ட்ராக்ட் முறையில் “ஏ பிளஸ்” (A+) பிரிவில் இருக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இனிமேல் இந்த “ஏ பிளஸ்” பிரிவையே மொத்தமாகத் தூக்கப்போவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரண்டு பேருமே இப்போதெல்லாம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவது இல்லை. ஒருவர் டெஸ்ட் போட்டிகளிலும், மற்றொருவர் ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
“ஏ பிளஸ்” கிரேடில் இருக்க வேண்டும் என்றால், அந்த வீரர் டெஸ்ட், ஒருநாள் போட்டி, மற்றும் டி20 என மூன்றிலும் தொடர்ந்து விளையாட வேண்டும். ஆனால் ரோஹித், கோலி இருவரும் இப்போது ஒரு குறிப்பிட்ட ஃபார்மட்டில் மட்டுமே ஆடுவதால், அவர்களை ஏ பிளஸ் கிரேடில் இருந்து நீக்கிவிட்டு, நேரடியாக “பி” (B) கிரேடுக்கு மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அப்படி மாற்றப்பட்டால், 7 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த இவர்களுக்கு, இனி ஆண்டுக்கு வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைக்கியா, “இது தனிப்பட்ட வெறுப்புணர்வு கிடையாது, இது ஒரு நடைமுறை முடிவு. மூன்று ஃபார்மட்டிலும் ஆடுபவர்கள் இல்லாததால், ஏ பிளஸ் பிரிவை வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு ஃபார்மட்டில் மட்டும் ஆடுபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது நியாயம் இல்லை,” என்று விளக்கம் அளித்துள்ளார். இளம் வீரர்களை ஊக்குவிக்கவும், மூன்று வடிவங்களிலும் விளையாடுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவுமே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கிங் கோலிக்கும், ஹிட்மேனுக்கும் சம்பளம் குறைவது ஒரு சகாப்தத்தின் முடிவாகவே பார்க்கப்படுகிறது!
