இன்றைய காலகட்டத்தில் சிறிய தலைவலி ஏற்பட்டால்கூட உடனே மாத்திரை எடுத்துக்கொள்வோர் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பெரும்பாலோருக்கும் உடனடியாக நினைவிற்கு வருவது பாராசிட்டமால் மாத்திரைகளே. ஆனால் பாராசிட்டமாலை அடிக்கடி பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் குறித்து பலர் அறியாமல் இருக்கிறார்கள்.
மருந்தகங்களில் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனால் சாதாரண தலைவலி அல்லது உடல் வலி ஏற்பட்டவுடன் பொதுமக்கள் இதனை எளிதாக வாங்கி பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு பாராசிட்டமால் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மருந்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் அமில அளவு அதிகரிப்பு, சிறுநீரக கோளாறுகள், தொடர்ச்சியான தலைவலி, மருந்து சார்ந்த பழக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
Also Read : சாப்பிட்ட உடனே மாத்திரை சாப்பிடலாமா? எவ்வளவு நேரம் கழித்து சாப்பிடணும்?
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் எந்த சூழ்நிலையிலும் பாராசிட்டமாலை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை அதிகமாக பயன்படுத்துவதால் இதயம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்திய முதியவர்களுக்கு சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Also Read : விபரீதமாக மாறும் வைட்டமின் மாத்திரைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்
எனவே தலைவலி போன்ற சிறிய பிரச்சினைகளுக்கு இயற்கை வழிமுறைகளை முதலில் பின்பற்றுவது சிறந்தது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தாலும் தலைவலி ஏற்படலாம். அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வது நல்லது.
காய்ச்சல், குளிர் தொடர்பான வலி, தொண்டை அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது காதுத் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு அழற்சி எதிர்ப்பு மருந்துகளை விட பாராசிட்டமால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
