Wednesday, January 14, 2026

பாட்டில்களில் உள்ள காலாவதி தேதி.., தண்ணீருக்கா அல்லது பாட்டிலுக்கா?

நாம் கடைகளில் வாங்கும் பெரும்பாலான பாட்டில் தண்ணீரில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காலாவதி தேதி பாட்டிலுக்கா அல்லது தண்ணீருக்கா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான அறிவியல் விளக்கத்தை இங்கு எளிய முறையில் பார்க்கலாம்.

தண்ணீரை சேமிக்க பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கசியத் தொடங்கும். இதனால் நீண்ட ஆண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை வைத்திருப்பது, தண்ணீரின் சுவை மற்றும் தரத்தை பாதிக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து பொதுவாக இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்தப்படக்கூடியவை. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பாட்டில்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

பாட்டில்களில் குறிப்பிடப்படும் காலாவதி தேதி தண்ணீருக்கானது அல்ல. அது பிளாஸ்டிக் பாட்டிலுக்கானதே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சந்தையில் தண்ணீர் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான பாட்டில்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகின்றன. இவை குறைந்த விலையில் கிடைப்பதால், பலர் அவற்றை மீண்டும் மீண்டும் நீண்ட காலம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதால், பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து உடலுக்குள் சென்று உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கலாம்.

பலர் வீடுகளிலும் இந்த ஒருமுறை பயன்படுத்தும் பாட்டில்களையே நீண்ட நேரம் தண்ணீர் சேமிக்க பயன்படுத்துகின்றனர். இதனால் பிளாஸ்டிக் துகள்கள் உடலில் கரைந்து பரவி பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

தண்ணீரில் வழக்கத்திற்கு மாறான வாசனை, பச்சை அல்லது நீல நிறம், உலோக சுவை அல்லது பழைய சுவை இருந்தால், அது தரக்குறைவானதற்கான அறிகுறி. இத்தகைய தண்ணீரை குடிக்காமல் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

Related News

Latest News