சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நீல வழித்தடத்தில் ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயணிகள் அதிகமாக இருக்கும் நேரங்களில், 3 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடபழனி முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை, வரும் ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனைகள் முடிந்ததும், பிப்ரவரி மாதத்திற்குள் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
