ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…

தமிழகத்தில் ரேஷன் கார்டு உணவுப்பொருட்களை பெறுவதற்கான அட்டையாக மட்டுமின்றி, முக்கிய அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.

மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இயற்கைப் பேரிடர் நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற அரசின் திட்டங்களைப் பெறவும் ரேஷன் கார்டு முக்கியமாக உள்ளது.

புதிய ரேஷன் கார்டுக்காக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகள் காரணமாக தாமதமான நிலையில், முதற்கட்டமாக 73 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். முதலில் TNPDS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘மின்னணு அட்டை சேவைகள்’ பகுதியில் உள்ள ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குடும்பத் தலைவர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கிடைக்கும் Reference Number-ஐ பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை அறிய TNPDS தளத்தில் ‘மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ பகுதியைத் தேர்வு செய்து Reference Number-ஐ உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

Related News

Latest News