பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், “ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். 22 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைக்கு நாளை தீர்வு வரும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து நாங்கள் ஏற்கெனவே அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும், அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டுள்ளோம். சத்துணவு ஊழியர்கள் சார்பாக பென்ஷனை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ சார்பாக முன்வைத்துள்ளோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் எங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற பழைய ஓய்வூதிய திட்டத்தையும், மற்ற அனைத்து கோரிக்கைகளையும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.
