ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கத்தில் சிவப்பு கோடு இருந்தால் மட்டுமே அந்த மருந்தை வாங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு கோடு உள்ள ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்தகங்களில் ஒட்டப்பட்டுள்ள QR Code மூலம் போலி மருந்துகள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் சுயமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது பல்வேறு உடல் நல ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன், நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் (Antibiotic Resistance) உருவாவதற்கும் காரணமாகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவரின் ஆலோசனையுடன், சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, இந்த மருந்துகள் எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சுயமாக எடுத்துக் கொண்டால், தற்காலிகமாக வலி அல்லது பிரச்சனைகள் குறையலாம். ஆனால் இந்த பழக்கம் தொடர்ந்தால், அது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்களை, அளவுக்கு அதிகமான ஆண்டிபயாடிக் மருந்துகள் அழித்து விடும். இதனால் தேவையற்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, ஆண்டிபயாடிக் மருந்துகளை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
