உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆண்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும், மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்கள். மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
பிறக்க உள்ள புத்தாண்டு நாட்டை சூழ்ந்த மதவெறி இருளை அகற்றி, ஒற்றுமை, சகோதரத்துவம் மலரச் செய்யட்டும். எல்லோர் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம். புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
மக்களுடன் மக்களாக இணைந்து அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.
வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று
இப்புத்தாண்டை வரவேற்போம்.
