பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கடந்த 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதலில் 7 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதலாக 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, பிஎல்ஓக்கள் அளித்த படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள், தங்களது பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ல் வெளியாக விருக்கிறது. வெளியிடப்பட்ட பட்டியலில் வாக்காளர் விவரங்களை அனைவரும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாதவர்க, இறந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்களில் பட்டியலில் இடம்பெற்றவா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகளோ, பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, டிசம்பர் 19 முதல் 2026ஆம் ஆண்டு ஜன. 18ஆம் தேதி வரை உரிமை கோரல்கள், மறுப்புரைகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒருவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை மேற்கண்ட இணையதளம் வாயிலாக அறியலாம். பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் புதிதாக சேர்க்க வேண்டிய வாக்காளர் படிவம் 6 மூலம் விவரங்களைப் பதிவு செய்து வழங்க வேண்டும்.
அந்த படிவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, தகுதியுடைய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
