திருவாரூர் அருகே டாஸ்மாக் கடைக்கு செல்ல போதிய சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், இந்த டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், மதுபிரியர்களின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக மதுபிரியர்கள் மது வாங்குவதற்காக இங்கிருந்து திருத்துறைப்பூண்டி டவுனில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு செல்கின்றனர்.
இதனால், தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், டாஸ்மாக் கடைக்கு செல்ல போதிய சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
