Thursday, December 25, 2025

‘உன் வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்லை’., கடுப்பில் கடிதம் எழுதி வைத்த திருடன்

திருநெல்வேலி பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு மத போதகர் வீட்டில் திருடச் சென்ற நபர், வீட்டில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து, “அடுத்த முறையாவது பணம் வைத்துவிட்டுப் போங்கள்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ மத போதனைகளை பரம்பும் ஊழியம் செய்து வருபவர் ஜேம்ஸ் பால் (57) என்பவர், தனது மகள் பணிபுரியும் மதுரைக்கு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தார். அவரது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருவதால், அவருக்குத் துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி நீட்டாவும் அங்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது செல்போன் மூலம் வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜேம்ஸ் பால், தனது அண்டை வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் திருடு போயிருந்தது. அதில் சுமார் 25,000 ரூபாய் இருந்ததாக அவர் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தியபோது, திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், “உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த தடவை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு, திருடன்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்ட நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச் சென்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News