தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அறந்தாங்கி ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இன்று மாலை ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி உள்ளார். அப்போது பெட்ரோல் தண்ணீர் கலந்த நிலையில் வருவதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
பெட்ரோல் போட வந்த மற்ற வாகன ஓட்டிகளும் இதைப்பற்றி பங்கு ஊழியர்களிடத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருகிறதா என பார்ப்பதற்காக பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றும் படி கூறியுள்ளனர்.
அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர் பம்பு வேலை செய்யவில்லை. பெட்ரோல் வராது எனக் கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்தனர். பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இதுபோன்று கலப்படம் செய்வதாக பொதுமக்களிடையே அடிக்கடி புகார் வந்திருந்த நிலையில் தற்போது நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
