வாழ்க்கையின் வேகமான ஓட்டம், அலுவலகப் பணிச்சுமை, சமூக ஊடக அழுத்தம், குடும்பப் பொறுப்புகள் என்று அனைத்தும் சேர்ந்து இன்றைய மனிதனின் மனநலனை பெரிதும் பாதிக்கின்றன. மன ஆரோக்கியம் குலைந்துவிட்டால், மன அமைதி குறையும். கவனத்திறன், உற்சாகம், வேலை திறன் அனைத்துமே பாதிக்கப்படும். இந்த சமநிலையை மீண்டும் கொண்டு வர, வார இறுதி நாட்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆழ்ந்த சுவாசம்
ஆழ்ந்த சுவாசம் மற்றும் பிராணயாமா போன்ற சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த கருவிகளாக கருதப்படுகின்றன. மெதுவாக ஆழமாக சுவாசிப்பது உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்கலை உயர்த்தி, நரம்பு மண்டலத்தை தளர வைக்கிறது;. இதனால் மனம் அமைதியடைகிறது. தினமும் 10–15 நிமிடங்களாவது இதனை செய்தால் மனஅழுத்தம் குறையும் என ஆய்வுகள் கூறுகிறது.
நடைப்பயிற்சி
வார இறுதியில் இயற்கை சூழலில் நடைப்பயிற்சி செய்யலாம். பூங்கா, தோட்டம் போன்ற பசுமை நிறைந்த இடங்களில் மெதுவாக நடப்பதால் உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது. மனத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மரங்கள், தூய காற்று, சிறிதளவு சூரிய ஒளி ஆகியவை சேர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மொபைல் வேண்டாமே
தொடர்ச்சியாக மொபைல், லேப்டாப், சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பது, மன அழுத்தத்தோடும் தூக்கக் குறைபாட்டோடும் நேரடியாக சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. அதனால் வார இறுதியில் குறைந்தது 2–3 மணி நேரமாவது அனைத்து டிஜிட்டல் திரைகளிலிருந்தும் விலகி இருப்பது நல்லது.
அந்த நேரத்தை ஒரு நல்ல புத்தகம் படிப்பதற்கோ, தியானம் செய்வதற்கோ, அல்லது குடும்பத்தினருடன் நேரம் கழிப்பதற்கோ பயன்படுத்தலாம்; இது மனதுக்கு ஓய்வையும் நெருக்கமான உறவுகளுக்கு வலிமையும் தரும்.
உணவுமுறை
மன ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் உணவுமுறை மற்றும் நீரேற்றமும் முக்கியமான இடம் பெறுகின்றன. ஓமேகா–3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைத் தேநீர் போன்றவை மனநலத்தை ஆதரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொண்டு சோர்வை குறைக்க உதவுகிறது.
இது போன்ற சிறிய மாற்றங்களைத் தொடங்கினால் அது பெரிய மன அமைதியைக் கொண்டுவரும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
