Thursday, December 25, 2025

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறப்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 11 கோடியே 81 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 11.81 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் 26,346 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் அண்மையில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. மின்தூக்கி வசதியுடன், 20 பேருந்துகள் நிற்கும் வசதி, 2 ஏடிஎம் மையங்கள், 11 கடைகள், பல்பொருள் அங்காடி, அலுவலக அறைகள், மூத்தகுடிமக்கள் காத்திருப்பு அறைகள், பயணச்சீட்டு வழங்கும் அறை, உணவங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள், உணவருந்தும் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு அறைகள், சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பிட வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இங்கு ஒரு நாளுக்கு 140 பேருந்துகள் சுமார் 1,400க்கும் மேற்பட்ட தடவைகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு நாசர், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல, சென்னை மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளர் காகர்லா உஷா சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உறுப்பினர் செயலர் பிரகாஷ் போக்குவரத்து கழக இயக்குனர் பிரபு ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

Latest News