திருப்பூர் அருகே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என கூறியதால், ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மேலும் சில ஆட்டோக்களை புதிதாக சேர்த்துக் கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், புதிய ஆட்டோக்களை அனுமதிக்க மாட்டோம் என பழைய ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்ததால், புதிய ஆட்டோக்கள் ஓட்டும் ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்துடன் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பாக திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
