டிரம்ப் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்! எச்-1பி விசா பிளானில் பரபரப்பு மாற்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்-1பி விசா கொள்கையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு திறமையாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளித்து, உள்நாட்டு உற்பத்தித் திறனை வளர்ப்பதே நோக்கம் என கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், இதற்கு முன்பு எச்-1பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். ஆனால் இப்போது உலகம் முழுவதிலிருந்தும் திறமைமிக்க நபர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த மாற்றத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஸ்காட் பெசென்ட் கூறியதாவது, ‘ட்ரம்ப்பின் எச்-1பி விசா தொடர்பான புதிய அணுகுமுறை, அமெரிக்காவின் உற்பத்தித் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு அறிவு பரிமாற்ற முயற்சியாகும். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டு தொழிலாளர்களையே சார்ந்திருந்த நிலையில், கப்பல் கட்டுமானம் மற்றும் செமி கண்டக்டர் தொழில்களை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வருவதுதான் தற்போதைய நோக்கம். இதற்காக அரிசோனாவில் பெரிய அளவில் வசதிகள் உருவாக்கப்படும்,’ என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, ‘இந்த திறன்கள் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்றுவார்கள். அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்புவார்கள். பின்னர் அமெரிக்கர்கள் இந்த வேலைகளை முழுமையாக மேற்கொள்வார்கள். இது இறக்குமதி சார்பினைக் குறைக்கும், உற்பத்தி வலிமையை அதிகரிக்கும் திட்டம், என்றார்.

மேலும், ‘அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது வலுவான வர்த்தகக் கொள்கையின் பலன்களை ஒவ்வொரு குடும்பமும் உணர வைக்கும் நடவடிக்கையாகும்,’ எனவும் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

Related News

Latest News