தமிழகத்தில் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்கிறது. தமிழ்நாட்டின் 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளில் 2 கோடியே 25 லட்சம் 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்படுவதுடன், பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. எனினும், ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை சரிசெய்ய முடியாமல் மக்கள் அலைந்து வருகின்றனர். அதனை கையாளும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உணவு பொருள் வழங்கல் துறையின் தகவல்படி, பொது விநியோகத் திட்ட பயன்களை மக்கள் எளிதில் பெற, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதம் ஒருமுறை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் அடுத்த முகாம் 08.11.2025 அன்று சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் போன்ற பொது விநியோகத் திட்ட சேவைகள் வழங்கப்படும். மறு வசதி தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளில் குறைபாடுகள் இருந்தால் இம்முகாமில் புகார் செய்யலாம்.
