சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரில் இருந்து தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு நேற்று காலை ஏர் சீனா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைக்கு மேல் அமைந்திருந்த உடைமை வைக்கும் பகுதியில் தீடிரென தீப்பற்றி எரிந்தது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமான பணியாளர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
விசாரணையில் பயணி தனது பையில் வைத்திருந்த லித்தியம் பேட்டரி சூடாகி தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
