ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த சாய் லட்சுமி (வயது 27) என்பவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனில் குமார் (30) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சேதன் கார்த்திகேயா மற்றும் லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதில் மகன் கேதன் கார்த்திகேயாவுக்கு பேச்சு சரியாக வரவில்லை என கூறப்படுகிறது.
ஜீன் பிரச்சினை காரணமாகத்தான் மகனுக்கு பேச்சு வரவில்லை. அதற்கு சாய் லட்சுமி தான் பொறுப்பு என அவரது கணவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மகனுக்கு பேச்சு சரியாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். இருப்பினும் அவர்களின் சண்டை ஓயவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் நல்ல உறக்கத்தில் இருந்த தன் குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சாய் லட்சுமியின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில் அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
