சென்னை குரோம்பேட்டையில் ஆபத்தை உணராத நபர் ஒருவர் முகத்தை துணியால் மூடிக் கொண்டு நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் ஒருவர் தனது முகத்தை துணியால் மூடிக் கொண்டு நடுரோட்டில் நின்றுக்கொண்டு வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மேலும் அந்த நபர் வாகனங்களை நோக்கி நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் பதறிபோய் வாகனங்களை நிறுத்தி வேகத்தை குறைத்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை நோக்கி ஏதோ சொல்லிக் கொண்டு ஆபதான முறையில் வாகனங்களை நோக்கி சென்றார். இதனால் ஒரு டாரஸ் லாரியின் பக்கவாட்டு பகுதி அவர் மீது லேசாக உரசியதில் கையில் இருந்த கவர்கள் கீழே விழுந்தன. இதனால், குரோம்பேட்டை சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
