விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியப்பட்டி பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த இருவர் நேற்று மதியம் பரோட்டா சாப்பிட்டுள்ளனர். அப்போது சால்னாவில் வெட்டுக்கிளி செத்துக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பாத்திரங்களை மூடாத காரணத்தால் ஒன்றிரண்டு பூச்சி விழுந்திருக்கலாம் எனவும் அது ஒன்றும் செய்யாது எனவும் ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து பரோட்டா சாப்பிட்ட இருவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து உணவகத்தை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
