தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள், பொதுமக்களிடம் மாமூல் பணம் கேட்கும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார். அதன்படி , பூந்தமல்லி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாமூல் பணம் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாக சிலர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே, போலீசார் புகாரில் தெரிவித்த ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பூந்தமல்லி, பஜார் தெருவைச் சேர்ந்த சேட்டு ( வயது 28), காட்டுப்பாக்கம் கே.கே நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த ரஞ்சித் ( வயது 21), குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்த அசத்துல்லா ( வயது 24), அதே பகுதி மேட்டு தெருவைச் சேர்ந்த விஜய் ( வயது 26) ஆகிய 4 ரவுடிகளை கைது செய்தனர் . கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
இதுபற்றி, பூந்தமல்லி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 ரவுடிகளையும் , பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி, காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறிய போது :- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரிடம் யாராவது மாமூல் பணம் கேட்டு மிரட்டினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
